traffic analytics

புதன், 22 ஜூலை, 2009

மாதிரவேளூர்........மரியாதைக்குரிய பேரூர்... ....!Mathiravelur

செறிந்து அடர்ந்த மரங்கள்,திகட்டாத பசுமையின் பரவலாய் வயல்கள்,கொள்ளிடத்தின் கரையில் ஒய்யாரமான பாதையில் சிதம்பரத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் துரத்தில் உள்ள கிராமம்தான் மாதிரவேளூர் என்னும் அழகிய கிராமம்.ஏறக்குறைய 10000 அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜீவாதாரங்களில் ஒன்றான சிறு கிராமம்.


Mathiravelur
உடனே பாரதிராஜா என யோசிக்காதீர்கள்.அதைவிட அழகான எளிமையான கட்டுக்கோப்பான கிராமம்.சிதம்பரத்தில் இருந்து கொள்ளிடத்தின் நீண்ட பாலத்தைக் கடக்கும் போதே ம்னம் எதோ ஒரு மோன நிலையில்போகின்றது.

மாதலீஸ்வரர்ர கோவில் இங்கு இருப்பதனால் இவ்வூருக்கு இப் பெயர் ஏற்ப்பட்டது.மேலே உள்ளதுதான் அக கோவில்.ஊரின் பாரம் பரியத்தை நினைவூட்டுகின்றது.மாதிரவேளூர் சுற்றி உள்ள ஊர்கள் கீரன்குடி பூங்குடி , பாலூரான் படுகை , பட்டியமேடு போன்றவையும் அடங்கும்.

பல் நூறு வரடங்களுக்கு முன் ,பொற்கால ஆட்சிக்கு உட்பட்ட பூமி, கலையும்,கவிகளும் வாழ்ந்து தழைத்த பூமி என்கிற எண்ணம் மேலோங்குகின்றது.இப்போதும் வாய் பிளந்து வியக்கும் வண்ணம் கல்லணைக் கட்டியவனின் எண்ணம் இனியதாய் மனதில் விரிகின்றது.

நீர் இல்லை என்றாலும் கொள்ளிடம் அழகுதான்.அன்னை எப்போதும் அழகுதானே...!



கொள்ளிடம் பாலத்தைத் தாண்டி வலது புறமாக திரும்பினால்,கை விடப்பட்ட குழந்தையாக சாலை. சிறிது தூரம் வண்டியின் குலுங்கல் நம்மை சீர்த்தூக்கிப் பார்க்க நல்ல தார் சாலையில் நுழைகின்றோம்.மழைக் காலம் இல்லை . ஆற்றுத் தடம் இனிதாக இடது புறமாக வளைந்து நெளிந்து நம்மை உள்ளே அழைக்க ஆயத்தமாகின்றது.

கேரளா போல் இல்லாமல் திகட்டாத பசுமை ,மெல்லிய தென்றல் என ஏறக் குறைய சொர்க்கம் கண்ணில் தெரிகின்றது.கடலின் அருகாமையைக்கூட நாம் உணர்வாதாக அக் காற்று காதோடு சொல்கின்றது. கொள்ளிடத்தின் உயர்த்தப் பட்ட கரையில் ,கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட அக் கரையின் மீது போடப்பட்ட பாதை இக்கால பொறிரியாளர்களை "வா ஒரு கைப்பார்க்கலாம் " என வம்புக்கு இழுத்தது.

இரு புறமும் அடர்ந்த மரங்கள்.கொள்ளிடத்தின் செழுமையை பறை சாற்றியது . அப்பழுக்கில்லாத கிராம குழந்தைகளின் ,சிரிப்பும் பெண்களின் நடை உடை பாவனைகள் ,ஆற்றின் அக்கரையில் உள்ள கிராமங்களை இணைக்கும் சிறு பாலங்கள் என கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே செல்ல செல்ல மனம் எங்கோ செல்கின்றது....!

மூங்கில் பாலங்கள், தென்னை மரத்தை இணைத்து செய்த பாலங்கள்,ஒருவர் மட்டும் நடக்கக் கூடியது போல் கட்டப் பட்ட ,ஆங்கிலேயர் காலத்துப் பாலங்கள் என ஒரு பாரம்பரிய லயிப்பை காணலாம்.

மணலை எடுத்துக் கொண்டு வித்தியாசமான ட்ராக்டர்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. எப்போதாவது நம்மைக் கடக்கும் இரு சக்கர வாகனங்கள் என போகும் வழியில்,ரோட்டின் மேலேயே பெரிய அழகிய கோபுரத்துடன் ஒருகோவில் ,ஊரின் சிறப்பை கூறுகின்றது.குடவரசி அம்மன் கோயில் .ஊர் பேர் கீரன்குடி .

மெல்ல இடது புறமாக ஒரு சிறு பாலத்தைக் கடந்து ஊருக்குள் நுழைய எதிர்ப்படும் மனிதர்களிடம் நாம் யார் என அறிந்து கொள்ளும் தவிப்பு தனியாக தெரிய,திரு.ராம கிருஷ்ணன் அவர்களின் வீடு எது என யாரிடம் கேட்டலும்,அதை ஒரு கௌரவமாக எடுத்துக் கொண்டு பதில் சொல்லும் தோரணை ....ரசிக்க வேண்டிய ஒன்றுதான்.

'அக்ரகாரதுக்குள்ள கடைசி வீடு"

'நேரா போனிங்கன்னா...இடது கைப் பக்கம் கடைசி வீடு'

'இந்த ஊருக்குள்ளயே பெரிய வீடு'

'பெருய மச்சு வீடு'

என ஏகப் பட்ட அறிமுகங்களுடன் வீட்டை கண்டு பிடித்து போனோம் .

பெரிய வீடுதான்.




யாரையும் காணவில்லை.மெதுவாக அழைத்தால் உள்ளே இருந்து பயங்கர குழப்பத்துடன் வந்த ஒரு முகம் ,யாரென விசாரித்து விட்டு ,உட்காருங்கள் என் சொல்லிவிட்டு காணாமல் போனது.

போன சமயம் மணி சுமார் நன்பகல் 12 இருக்கும்.அன்றைய தினமலரை அப்போதுதான் கொண்டு வந்து போட்டு விட்டு போனார்கள். எடுத்துப் புரட்டும் போது,கால் அரவம் கேட்டு நிமிர்ந்தால் யாரோ இருவர்,

"ஐயா ...இருக்காங்களா?"எனக் கேட்க ,"தெரியவில்லை...!"என சொல்லவும்,

"நீங்க யாரு?" என விசாரிப்புப் படலம் ஆரம்பித்தது.

"இங்க ஐயாதான் தொடர்ந்து ஐந்து முறை பிரசிடென்ட்டு....அதாவது 25 வருடங்கள்...இப்பதான் இதை தனி ன்னு ஆக்கிட்டதால ஐயாவால நிக்க முடியல...!"எனக் கவலையுடன் அவர்கள் சொல்ல சற்று ஆவல் கூடியது.அவர் எப்படி இருப்பார் என எதிர் பார்ப்பு மேலோங்கியது.

உள்ளே இருந்து வெளியே எட்டிப் பார்த்த முகம் திரும்ப வந்து "ஐயா வயலுக்கு போய் இருக்காங்க .இப்ப வந்திடுவாங்க.."என சொல்லிவிட்டு காணாமல் போனது.வேலைக்காரப் பெண் தோற்றத்தில் இருந்த ஒரு பெண் எட்டிப் பார்த்து என்ன பேசுவது என தெரியாமல் அசட்டுச் சிரிப்புடன் ,தண்ணீர் வேண்டுமா எனக் கூட கேட்காமல் உள்ளே சென்றது அந்த வீட்டில் உரிமைப் பட்ட பெண் இல்லாத சூழ்நிலையை வெளிபடுத்தியது..

வந்தவர்கள் தொடர்ந்தார்கள்,"எங்கே தங்கி இருக்கிங்க?"

"சிதம்பரத்தில்தான்"

"அங்க ஐயாவின் சம்பந்தக்காரவங்க லாட்ஜ் இருக்கே அங்க தங்கலியா?"

அவர்கள் கிளம்பவும் ,மெதுவாக வயல் வெளிகளைப் பார்க்கலாம் என மெதுவாக நடையைத் தொடர்ந்தேன்.வீட்டை ஒட்டி பின்னால்,ஓடாமல் பூட்டிய ஒரு அரிசி ஆலை பழைய கம்பீரத்தை நினைவூட்டியது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை வயல்கள்,நான்கு மோட்டார்கள் ஓடிக் கொண்டு இருந்தன.

பெண்கள் துவைத்துக் கொண்டிருந்தார்கள்.குளித்துக் கொண்டும் இருந்தார்கள்.காமிராவைக் கவனித்துக் கொண்டே அவர்களை நெருங்க,

"எங்க வந்திருக்கிங்க?"கொஞ்சம் கூட கள்ளமில்லாத விசாரிப்பு....

"பிரசிடென்ட் வீட்டுக்குத்தான்..."

"யாருமே இல்லையே..நேத்துதான் அவங்க பொண்ணு போச்சு..இது எல்லாம் ஐய்யவோடதுதான்.சுமார் அறுவது ஏக்கர் "என கேட்காமலே டேட்டாக்கள் குவிந்தன.

"அதோ அந்த செங்கல் காளவாசலும் ஐயாவோடதுதான்.."முழுக்க முழுக்க விவசாயக் குடும்பமோ என எண்ண முழுவதும் தவறு என்றது அடுத்துக் கிடைத்த சேதிகள்.




மாடு ஒன்றை ஓட்டிக் கொண்டு வந்த முதியவரும் மற்றவர்களைப் போலவே முன்னுரை எழுதி விட்டு முடிவுரையும் தந்தார்.

"அம்மா...அய்யாவுக்கு 10 வயசுல அவரோட அப்பா இறந்துட்டாரு.ஐயாதான் மூத்தவரு.இது எல்லாமே சொந்த உழைப்பு தாயி!மூணு பசங்க...மூணு பொண்ணுங்க...மூத்தவரு பெரிய எஞ்சினியர் .E.B.ல இருக்காரு.ஸீர்காழி சிதம்பரம்ல அவர் தான் பெரிய ஆபீஸராம் .அடுத்தவர் வக்கீல் இப்போ எதோ வெளி நாட்டுல இருக்காராம்...அப்புறம் பொண்ணுங்க.எல்லோரையும் படிச்சவங்களுதான் கட்டி கொடுத்திருக்காரு..கடைசி பையன்தான் இப்ப பார்த்திங்க இல்ல வீட்டில...அவனும் எதோ விவசாயம் படிச்சவராம்....!"

அந்த கிராமத்துக்கும் பிள்ளைகளை வளர்த்திருக்கும் சம்பந்தமே இல்லை என ஆச்சர்யப் பட்ட போது அந்த பெரியவர் தொடர்ந்தார்,

"அம்மா......மநோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் இது ஊர் காரராம்.பெயர் திரு.சபாபதி மோகன் .இந்த ஊரை பூர்விகமாக கொண்டு வெளி ஊரில் புலம் பெயர்ந்தவர்ககளில் நிறைய படித்தவர்கள்தான் ...இப்போ
டி . வி இல் நடிக்கும் இருவர் அண்ணன் தம்பிகள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.ஒருவர் பெயர் நெப்போலியன் ...
மற்றவர்
பெயர் தெரியவில்லை" என்றார்.

நெப்போலியன்


என்னை வரவேற்ற புதுமுகம் .போய் அதிக நேரம் ஆகி விட்டது என தேடிக் கொண்டு வர வீட்டை நோக்கி சென்றேன்.அப்போதும் அய்யா வரவில்லை.

மீண்டும் சிலர் தேடிக் கொண்டு வர அதே விசாரிப்புகள்.....மீண்டும் சில செய்திகள்."எங்க வீட்டு விஷேசம் எல்லாம் அய்யா இல்லாம இருக்காதுங்க.எந்த பஞ்சாயத்தும் ஐயா இல்லாம தீராதுங்க.தீவிர கம்யூநிஸ்ட்காரர்.பிள்ளைகளுக்கு கம்யூநிஸ்ட் தலைவர்கள் முன்னிலையில் தான் கல்யாணமே நடத்தினார்.ஆனாலும் அவரின் துணைவியார் கிறிஸ்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்ட போதும் அதைத் தடுக்கவில்லை "என அவரின் பெருந்தன்மைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள்.பார்க்கும் ஆவலைக் கூட்டிக் கொண்டே போனார்கள்.

அது ஒரு நீண்ட அக்ரகாரத்தின் கடைசி வீடு.அக்ரகாரத்தின் பெரும்பாலான வீடுகள் காலி செய்யப் பட்டிருந்தன.பிழைப்பு தேடி நிறைய பேர் வெளியேறியதாகச் சொன்னார்கள்.வாழ்வின் வெறுமை நிழலாடியாது.

கேரளாவில் 20 வருடத்திற்கு முன் ஒரு கிராமத்திற்குச் சென்று ,மீண்டும் அங்கே சென்றால் அடையாளமே தெரியாத அளவிற்கு உருக்குலைந்து போய் இருக்கும் என்பார்கள்.பிழைப்பு இல்லாமையால் இன் நிலைமை.இது தமிழ் நாட்டிலும் என எண்ணும் போது மனது வலிக்கத்தான் செய்கின்றது.

பொங்கலுக்கு அணைவரும் கூடுவார்கள் என்பது ஆறுதலாக இருந்தது.வாசலில் இருந்த கம்பி கதவில் சாய்ந்து கொண்டு இருந்த போது 75 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் வந்து வீட்டின் முன்னால் நிறுத்தி இறங்க,சுதாரித்துக் கொண்டேன்.கதவைத் திறந்து விடவும் சைக்கிளை உள்ளே ஏற்றி நிறுத்தியவர்,யார் எனக் கேட்டு விசாரித்து விட்டு ,

"உள்ள வாம்மா "எனக் கூறிக் கொண்டு வேகமாக உள்ளே சென்றவர் பாயை எடுத்து போட்டு உட்காரச் சொல்லி விட்டு ,வேலைக்காரப் பெண்ணிடம் ,

"தண்ணீர் கொடுத்தாயா? "எனக் கேட்டு விட்டு பரபரப்பாக என்னைக் கவனிக்க எத்தனித்தார்.

இயல்பான பேச்சுக்கள்.அவரின் பிள்ளைகளைப் பற்றி மிகச் சாதரணமாக...சொன்னார்.

"என் பிள்ளை போன வாரம் தடுக்கி விழுந்தானக்கும் " எனப் பெருமை பேசும் உலகில்........ யதார்த்தம் மிக அழகாய் இருந்தது.

ஒரு வார்த்தை கூட தன் நிலங்களைப் பற்றியோ....சாதனைகள் பற்றியோ ஒரு வார்த்தை.......

சாதாரண குடியிருப்போர் சங்கத்தலைவர்கள் எல்லாம் விசிடிங் கார்டு அடித்து அலட்டிக் கொள்ள.....25 வருடங்கள் பிரசிடன்ட்டாய் இருந்தது பற்றி ஒரு வார்த்தை.....

ஆம் .மேன் மக்கள் மேன் மக்கள்தான்.





திரு.ராமகிருஷ்ணன் அவர்கள்

அவரைக் காணக் கிடைத்ததை ஒரு பெரும் பேராகத்தான் நினைக்கிறேன்.திரும்பவும் அவர் வயலுக்கு செல்ல ,நானும் அவரைத் தொடர்ந்தேன்.ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார்.என்னால் அவர் பின் ஓடத்தான் முடிந்தது.அவரின் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.பை-பாஸ் சர்ஜரி செய்தவர் அவர் என்கிறார்கள்.ஸைக்கிளில் மட்டுமே சுற்றி வருகிறார்.கிராமத்தைத் தவிர வேறு எங்கும் தங்குவது இல்லை.

பிள்ளைகள் எவ்வளவு வருந்தி அழைத்தாலும் ,அங்கே தங்காமல் இங்கேயே இருக்கிறார்.அம்மா கடந்த வருடம் தவறி விட்டார்கள்.அந்த வெறுமை புதிதாகச் சென்ற எனக்கே தெரிந்த போது அவரின் நிலைமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

மத்திய உணவை முடித்துக் கொண்டு கிளம்பும் போது காலில் விழுந்தேன்.அவர் சொன்னார்"ஏம்மா ....நீ வேற ....நானே செய்த பாவத்தை எங்கே தொலைப்பது என தெரியாமல் இருக்கிறேன்...."என்ற போது ,கண்டிப்பாக எங்கள் இரு வ ரின் கண்களும் பனித்திருந்தன.

ஒரு மணி நேரம் மட்டுமே ஏற்ப்பட்ட அந்த உறவு எப்போதும் மனதை விட்டு நீங்காது.எப்படி வாழ வேண்டும்,பேச வேண்டும்.....நிறைய ....நிறைய கற்றுக் கொண்டேன்....

திரும்பவும் அதே பாதை.ஆனால் மனது வலித்துக் கொண்டே இருந்தது.


எந்தப்புரம் சென்றாலும் பின்னொக்கிச் செல்லும் மரங்கள் போல மனமும் பின்னோக்கியே சென்றது.எத்தனை கிராமங்கள் நம் என்.எத்தனை எத்தனை மனிதர்கள் இவரைப் போல..என் தாய் மண்ணுக்கு எப்போதும் பெருமைதான் அதன் மண்ணின் மைந்தர்களால்தான் .....!