இந்துக்களின் புனித நகரான வாராணாசியில் வாழ்ந்தவர் இவர்.ஆனால் பிராமணர் அல்லாத பிரிவைச் சேர்ந்தவர்.அவர்கள் நாலாவது வர்ணமாகிய சூத்திரர்கள். எனவே தீண்டத் தகாதவர்.பிறப்பால் அவரின் மதம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.ஆம் அவர் முறை தவறி பிறந்த குழந்தை .
முறைகேடாக பிறந்த குழந்தை கிடையாது.முறை கேடான பெற்றோர்தான் உண்டு.கங்கைக் கரையில் விட்டு சென்ற அக்குழந்தை ,மிகச் சிறந்த குரு ராமனந்தரின் கையில் கிடைத்தது.அதி காலையில் குளிக்கச் சென்ற குருவின் பாதத்தை குழந்தையின் கைகள் பற்றிக் கொள்ள , குழந்தையை அள்ளிக் கொண்டு ஆசிரமம் சென்றார்.
அங்கு அவருக்கு ஆயிரக் கணக்கான சீடர்கள்.குழந்தையை எங்காவது அனாதை இல்லத்தில் சேருங்கள் அல்லது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என பெரும் பிரச்சனை. ஆனால் ராமனந்தரோ "என் பாதத்தை பற்றி சரணடைந்த குழந்தையை
மறுத்து உதறவே முடியாது"என மறுத்து விட்டார்.
பலமான வாக்கு வாதம்.குழந்தையின் கையில் கபீர் என எழுதி இருந்தது.அது ஒரு இஸ்லாமிய பெயர்.கடவுளின் நூறு நாமங்களில் ஒன்றுதான் அது.ஆனால் தொண்ணுற்று ஒன்பது நாமங்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும்.அந்தக் கடைசி நாமத்தை உச்சரிக்கும் தகுதி நமக்கு இல்லாமையால் அந்த நாமம் மட்டும் விடு பட்டிருக்கும்.அக் குழந்தை தன் பாதத்தைப் பிடித்ததால் அதைத் தனது சீடனாகவே நினைக்க ஆரம்பித்தார்.
பிற்காலத்தில் தன்னையும் விட சிறந்த குருவாக ஆக குழந்தை வரும் என அவர் நம்பினார்.ஆனால் முறை தவறி,உயர் ஜாதி அல்லாமல் பிறந்த அவரிடம் யாரும் சென்று பேசவோ, கேள்வி கேட்கவோ விரும்பவில்லை. ஆனால் மற்றவர்கள் அவரைப் பற்றி பேசும் போது அதை குறித்துக் கேட்டுக் கொண்டனர்.
பக்தி இயக்கம் ஆரம்பித்து தனது கருத்துக்களை பரப்பலானர்.இரு மதங்களின் கலவையாகவுன் ,கீதையின் சாராம்சமாகவும் இருந்தது அவரின் பேச்சுகள்.ஒவ்வொரு வாழ்க்கையும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டும் கலந்தது என்கிற போதனையை அடிப்படையாக கொண்டார்.
அவரின் கவித்துவம் பலராலும் இன்றுவரை வியந்து போற்றும் விஷயமாக இருக்கிறது.எளிமையான ஹிந்தியில் உயரிய கருத்துக்கள்.
ஒ சீடனே, எங்கே என்னை தேடுகிறாய்?
பார்!அதை எல்லாம் தாண்டி நான் இருக்கிறேன்.
நான் கோவிலிலும் இல்லை!மசூதியிலும் இல்லை!
காபாவிலும் இல்லை! கைலஷிலும் இல்லை!
கொண்டாட்டங்களிலும் இல்லை!யோகாவிலும் இல்லை!
உண்மையைத் தேடும் கலையை கொண்டவர்களே
கண நேரத்தில் காணலாம் என்னை!
ஒ....சாதுவே !
கடவுள் ஒவ்வொரு சுவாசத்தின் சுவாசத்திலும் இருக்கிறான்!
(மொழி பெயர்ப்பில் பொருள் மாறவில்லை.லயம் குறைந்தால் மன்னிக்கவும்)
எளிமையாக விளக்கும் அவரின் கவிதைகள் இன்றுவரை மிகப் பிரபலம்.பலர் ராம நாமத்தை அடிக்கடி உச்சரிப்பார்கள்.பலர் இஸ்லாமிய கடவுளின் நாமத்தை உச்சரிப்பார்கள்.எல்லாமே உலகைப் படைத்தக் கடவுளின் ஒரே நாமம்தான்.எனப் பொருள் படும் "கோயி போலே ராம் ராம் கோயி........"எனும் பாடல்.
ஞானிகளைப் பற்றி சிறிய இடத்தில் முழுவதும் எழுத இயலாது.ஆனாலும் சிறு தகவல் ,அறிந்து கொள்வது நல்லது தானே...!