traffic analytics

புதன், 22 ஏப்ரல், 2009

சாய்ந்து கொள்ள தோள்கள் எங்கே...?

கவிதைகளும் ...கட்டுரைகளும்....
கண்ணீர்த் துளிகளும் - உன்
கவலையை மாற்றுமா?-இல்லை
கற்பணையைக் கலைக்குமா?

காட்டு வாழ்க்கையும்
கனக்கின்ற மனமும்
கழிந்து போன உன்
கனவைக் கொடுக்குமா?

கிழிந்த செவ் உடைகளும்-பலர்
கிழித்த உன் மனங்களும்
கனிந்த பலப் பொய்களால்
கனன்று வருமா?

கதவடைப்புகளும்-பழங்
கர்ணக் கதைகளும்-பெரும்
கர்வப் பேச்சுகளும்-உன்
கவலையைத் தீர்க்குமா?

காயங்களுடன் -மன
மாயங்களுடன்-சுமை
பாரங்களுடன் - நடை
தளர்வுகளுடன்....


நாடும் மறந்து
நாட்டாரையும் இழந்து
நட்டாற்றில் இறங்கினாயே
நல்லவற்றை இழந்தாயே..!

தலை முறைகள் தளர்ந்து போய்
தவறுக்கு காரணம் கேட்டால்
தண்டிக்கும் காலனை காரணம் சொல்வாயா?
தரம் தாழ்ந்த காலங்களைக் கண்டு சொல்வாயா...?

தொலைத்த இளமையும்...தொலைந்த வாழ்க்கையும்
தொடரும் துன்பங்களும்....தூரத்தில் கானல்களும்
தொங்கும் சொர்கங்களும்....தொலைக்க முடியாமல்
தவித்து போனாயே....தமிழா ......தகித்து போனாயே...!

மயக்கம் கொண்ட நடை ....
மருட்சி மேவும் பார்வை ....
மீட்சி தேடும் கனவை....
மிரட்டுகிறதே போர் ஒலியே ..!

கூட்டமாய் உன்னைக்
கண்கொண்டு பார்க்கும் போது
கள்ள இதயம் கூட கணிந்து போகுமே
கல்லான உள்ளம் கூட கசிந்து ஓடுமே...!

வையம் முழுமையும்
வைராக்கிய வாழ்க்கையில்
வாழும் உன் பிள்ளைகளின் -வேதனை.....!
முழுவதும் உணர்ந்தேன் ... முதன் முதலாய் உணர்ந்தேன்.

தவறு யார் செய்திருந்தாலும்
தவறுதலாய் எங்கே நடந்திருந்தாலும் ...
தண்டிக்கப் பட்டது மானிடம்தானே..!
துண்டிக்கப் படுவதும் உன் உடல்தானே...!

கையறு நிலை பாடல் - பாடி
கையாலாக நிலையில் -வாடி
கையேந்தி நிற்க்கிறேன்- நாடி
கைலாய நாதனை -தேடி !